பெகாசஸ், வேளாண் சட்ட விவகாரம்; நாடாளுமன்றம் அமளியால் ஒத்திவைப்பு: சிரோன்மணி - காங். எம்பிக்கள் திடீர் மோதல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ம் தேதி தொடங்கியது. பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், புதியவேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. இந்நிலையில் இன்று மக்களவை கூடியபோது எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால், பிற்பகல் 11.30 மற்றும் மதியம் 2 மணி வரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார். அதேநேரம் மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல், விவசாய சட்டங்களுக்கு எதிராக பதாகையை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். அப்போது அவ்வழியாக வந்த காங்கிரஸ்  எம்பி ரவ்னீத் சிங் பிட்டு, எம்பி ஹர்சிம்ரத் கவுரை நோக்கிச் சென்றார். அப்போது, இரு எம்பிக்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் நடந்தது. ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: