மகளிர் ஹாக்கி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியது நெதர்லாந்து

டோக்கியோ: ஒலிம்பிக்கில் இன்று காலை நடந்த மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று காலை டோக்கியோவில் உள்ள ஒயி ஸ்டேடியத்தில் நடந்த மகளிர் ஹாக்கி முதலாவது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் துவங்கிய 19வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் முன்கள வீராங்கனைகள் மரியா கீடல்சும், ஃபெலிஸ் அல்பெர்சும் அடுத்தடுத்து அதிரடியாக தலா ஒரு ஃபீல்டு கோல் அடித்து மிரட்டி விட்டனர்.

முதல் பாதியில் இங்கிலாந்தின் தடுப்பு அரண் மிகவும் பலவீனமாக இருந்தது. இதனால் நெதர்லாந்துக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இங்கிலாந்து கோல் கீப்பர் கிளேர் ஹின்ச்சும், மற்ற வீராங்கனைகளும் இணைந்து, பெனால்டி கார்னரில் கோல் விழாமல், தடுத்து விட்டனர். முதல் பாதி ஆட்ட முடிவில் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் 2ம் பாதி ஆட்டம் துவங்கியதுமே, நெதர்லாந்து வீராங்கனைகள் பந்துடன் அதிரடியாக இங்கிலாந்தின் பெனால்டி ஏரியாவுக்குள் புகுந்தனர். அப்போது இங்கிலாந்து வீராங்கனைகளின் தவறால், நெதர்லாந்துக்கு பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது.

இதில் நெதர்லாந்தின் மிட்ஃபீல்டர் மரியா வெர்ச்சூர் கச்சிதமாக கோல் அடித்தார். அடுத்து 38வது நிமிடத்தில் ஃபெலிஸ் அல்பெர்ஸ் மீண்டும் ஒரு ஃபீல்டு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த வீராங்கனைகளும் தாக்குதல் பாணியில் இறங்கினர். இதற்கு பலன் கிடைத்தது. 41வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. இதில் கிசெல் அன்ஸ்லே கோல் அடித்தார். ஆனால் 49வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஃபிரடெரிக் மால்டாவும் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, இங்கிலாந்துக்கு எதிராக கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதையடுத்து இப்போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு துவங்கிய மகளிர் ஹாக்கி 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

Related Stories: