டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு தண்டனை; 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை; கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில் , வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 2013-ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப் படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.  

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என செசன்ஸ் நீதிமன்றம் காலையில் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பை சேர்ந்தவர் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. அரசு நரம்பியல் துறை மருத்துவராக பணியாற்றி வந்தார். மருத்துவர் சுப்பையாவின் தாய் மாமனுக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் 57 சாட்சிகளை விசாரணை செய்து173 ஆவணங்கள், 42 சான்றுகள் குறியீடு செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 3 சாட்சிகளை விசாரித்து 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. கைதான 10 பேரில், ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனதால் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்த போது, கூலிப்படை கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. போலீஸ் விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரண்டேகால் ஏக்கர் நிலத்துக்காக சுப்பையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ஆசிரியர் தம்பதி பொன்னுசாமி, மேரி புஷ்பம் இவர்களது மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ், வழக்கறிஞர் வில்லியம்ஸ், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கபடி வீரர் ஏசுராஜன்,  முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய  10 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூ வர் ஆகிவிட்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜராகி வாதாடி வந்தார்.   அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டன. 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டன. 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

தற்போது, வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி தீர்ப்பளிக்கபட இருந்தது. ஆனால் பொன்னுசாமி, மேரிபுஷ்பம் ஆகியோர் உடல்நிலை சரியில்லை என்று கூறி ஆஜராகவில்லை.

இந்நிலையில், சென்னை முதலாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட பொன்னு சாமி, மேரிபுஷ்பம், பேசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பு சாட்சிகள் ஆதாரங்கள் வைத்து நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிக்கிறது என்று தீர்ப்பு கூறினார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வக்கீல் விஜயராஜ் வாதாடினார். தொடர்ந்து, இருதரப்பினரும் வாதாடி வருகிறார்கள். இருதரப்பு வாதங்கள் முடிந்த பின், குற்றவாளிகளின் தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: