கஜா புயலில் வீடிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு அரசு வீடு கட்டித் தரஎதிர்பார்ப்பு

சேதுபாவாசத்திரம் : சேதுபாவாசத்திரத்தில் கடந்த கஜா புயலின்போது இடிந்துபோன வீட்டை சீரமைக்க வசதியில்லாமல் தவிக்கும் கூலித்தொழிலாளி தனக்கு அரசு சார்பில் இலவச வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.சேதுபாவாசத்திரம் அருகே செருபாலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி (50), கூலி தொழிலாளி. இவரது மனைவி லலிதா (46), இவர்களுக்கு வினிதா (27) என்ற மகளும், வல்லரசு (24), வசந்தகுமார் (20), வருண் (6) என மூன்று மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக லலிதா கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். வினிதா தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, பேருந்து வசதி இன்றி வேலைக்கு போகாமல், இருந்த வேலையையும் பறிகொடுத்து விட்டு, தற்போது வேலை இல்லாமல் வீட்டில் உள்ளார். வசந்தகுமார் பிளஸ்2 முடித்துள்ளார்.

தற்போது வல்லரசு மட்டுமே பெயின்டிங் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கடந்த கஜா புயலின்போது, பால்சாமியின் வீடு சேதமடைந்தது. இருப்பினும் வீட்டை சீரமைக்க முடியாமல், தார்பாய் கொண்டு குடிசையை மூடி, வசித்து வருகின்றனர். இவர் கடந்த இரண்டாக வீடு அரசு சார்பில், வீடு கட்டித்தரக் கோரி மனு அளித்து விட்டு, தற்போது வரை காத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், இதுவரை அரசு பசுமை வீடு கட்டுவது தொடர்பாக, எந்த அதிகாரியும் பால்சாமியை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் வீடு இல்லாமலும், வருமானமின்றியும் பால்சாமி பிள்ளைகளுடன் தவித்து வருகின்றார்.

இது குறித்து பால்சாமி கூறியதாவது: அரசு சார்பில், வீடு கட்ட அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது உள்ள வீட்டை இடித்து விட்டு, அந்த இடத்தை காட்டினால், தான் வீடு கட்ட அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்போது வசிக்கும் வீட்டை இடித்து விட்டால் பிள்ளைகளும் நானும் எங்கு தங்குவது என தெரியவில்லை. எனவே அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும் என்றார்.மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கவனித்து, மழையில் ஒழுகும் குடிசை வீட்டில் இருக்கும் பால்சாமி குடும்பத்திற்கு வீடு கட்டித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: