தாராபுரம் அருகே போலி வெங்காய விதையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உற்பத்தி நிறுவனம் இழப்பீடு

தாராபுரம் : தாராபுரம் அருகே போலி வெங்காய விதையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தினகரன் செய்தி எதிரொலி காரணமாக தனியார் வெங்காய விதை உற்பத்தி நிறுவனத்தினர் இழப்பீட்டு தொகை வழங்கினர்.தாராபுரத்தை அடுத்த பெல்லம்பட்டி,குண்டடம், நவநாரி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில்  சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது, கடந்த ஏப்ரல் மாதம் கொரானா ஊரடங்கு காலத்தில் சின்ன வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு கிலோ  125ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. இதனால் சின்ன வெங்காயம் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டிய விவசாயிகளுக்கு வழக்கமாக கிடைக்கும் சின்ன வெங்காயத்திற்கான நாற்றுகளோ, வித்தையோ கிடைக்காமல் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

 இந்நிலையில் சில வெங்காய வியாபாரிகள் இடைத்தரகர்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று ஒரு கிலோ வெங்காய விதையை 16,000 ரூபாய் வரை விவசாயிகளிடம் விற்பனை செய்தனர். இதனை நம்பி வாங்கிய விவசாயிகள் 1500 ஏக்கர்களில் சின்ன வெங்காயத்தை பயிரிட்டு 150 நாட்கள் வரை அறுவடைக்காக காத்திருந்தனர்.

 வெங்காயத்தை அறுவடை செய்து பார்த்தபோது அவர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. விளைச்சல் கண்டிருந்த வெங்காயம் அனைத்தும் சிவப்பு நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்திலும் சின்ன வெங்காயத்தையும் சேராமல் பெரிய வெங்காயத்திற்கும் சேராமல் வேறு வெங்காயமாக விளைச்சல் கண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்ச ரூபாய் வரை நஷ்டமடைந்தனர்.

இது குறித்த செய்தி கடந்த 15.07.2021 அன்று தினகரன் நாளிதழில் பிரசுரமானது. தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஈசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் தாராபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போலி வெங்காய விதை விதைகளால் பாதிக்கப்பட்டது குறித்து புகார் அளித்தனர்  விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையிலும், தினகரன் செய்தியின் எதிரொலியாலும் உடனடியாக அதிகாரிகள் நடவடிகை்க எடுத்தனர்.

கலப்பட போலி விதைகளை விற்ற  இடைத்தரகர்கள், விதையை உற்பத்தி செய்த தனியார் நிறுவனம் உள்ளிட்டவைகளுக்கு பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் உத்தரவிட்டனர் இதனடிப்படையில் தாராபுரத்தை அடுத்த பெல்லம்பட்டி கிராமத்திற்கு நேற்று நேரில் வந்த தனியார் விதை நிறுவன அலுவலர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் முன்னிலையில் முதல் கட்டமாக அதிகம் பாதிக்கப்பட்ட 80 விவசாயிகளுக்கு, அவர்கள் வாங்கிய  வெங்காய விதை எடை யின் அடிப்படையில் 36 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கினர்.போலி விதையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>