ஆடிப்பெருக்கு நாளில் கல்லணை, திருக்காட்டுப்பள்ளியில் காவிரி படித்துறை வெறிச்சோடியது

திருக்காட்டுப்பள்ளி : தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலும், திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றிலும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பெண்கள் கூடி கொண்டாடுவர். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கால் கல்லணை மற்றும் திருக்காட்டுப்பள்ளி காவிரி படித்துறை நேற்று (3ம் தேதி) வெறிச்சோடி காணப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்ட மக்கள் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் காவிரித்தாய்க்கு நன்றி சொல்லும் வகையில் ஆடிமாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடி மகிழ்வார்கள். காலையில் பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கூடி காவிரித்தாய்க்கு பழங்கள், அரிசியுடன் வெல்லம் கலந்து கரையில் படையலிட்டு காவிரித்தாயை வழிப்படுவார்கள். ஓடும் நீரில் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை நீரில் விடுவார்கள்.

திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழவும், கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடக்கவும் காவிரி தாயை வேண்டி மஞ்சள் கயிற்றை அணிவார்கள். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரங்களில் கூட இதற்கு வழிவகுக்கும் வகையில் அரசு மேட்டூர் அணையை திறக்க சிறப்பு அனுமதியளித்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

மேட்டூர் அணைக்கு போதுமான தண்ணீர் வரத்து இல்லாமல் திறக்கப்படாத நிலையில் கூட கல்லணையில் தேங்கிய நீரிலும், திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் பேரூராட்சி நிர்வாகம் பம்பு செட் மூலமும் வழங்கிய தண்ணீரிலும் மக்கள் படையலிட்டு மகிழ்ந்தனர்.ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டு திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் முழு ஊரடங்கால் காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை. இதனால் கல்லணை மற்றும் திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்று கரைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: