கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு-வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர்

ஆண்டிபட்டி : கொரோனாவை கட்டுப்படுத்த கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதித்த நிலையில், நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் கோயில்களுக்கு வெளியே நின்று சுவாமி கும்பிட்டுவிட்டு  திரும்பிச் சென்றனர். தேனி மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் கோவிலுக்கு பொதுமக்கள் அதிகம் செல்வார்கள். இதனால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் முதல் வரும் 8ம் தேதி வரை 7 நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடைவிதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனால் நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. இதில் தெப்பம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைமேல் அமைந்துள்ள மாவூற்று வேலப்பர் கோவில், கணவாய் மலைப்பகுதியில் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோவில், ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில், சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில், ஜம்புலிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள கதலி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் அனைத்து கோவில்களிலும் ஆகம விதிகள் படி, சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது. கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வெளியே நின்று சுவாமி கும்பிட்டுவிட்டு திரும்பிச் சென்றனர். வேலப்பர் கோவிலுக்கு நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்களை ராஜதானி போலீசார் தெப்பம்பட்டி பகுதியில் தடுப்புகள் அமைத்து திருப்பி அனுப்பினர்.

பக்தர்கள் பலர் மேற்கு தொடர்ச்சி மலைமேல் அமைந்துள்ள மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு போக முடியாததால் மலையடிவாரத்தில் சாமி தரிசனம் செய்து சென்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டிபட்டி சுற்றியுள்ள கோவில்களில் சித்திரை திருவிழா, பங்குனி திருவிழா, ஆடி திருவிழா போன்ற திருவிழாக்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: