மஞ்சூர் அருகே வனப்பகுதியில் சிறுத்தை உடல் மீட்பு

மஞ்சூர் : மஞ்சூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தையின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட பிக்கட்டி காப்புகாட்டில் சிறுத்தை, காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்நிலையில், நேற்று காலை சிவசக்திநகர் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தலைமையில் குந்தா ரேஞ்சர் சரவணன், வனவர் ரவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். பின்னர்,  கால்நடை மருத்துவர்கள் நந்தினி மற்றும் விநாயகம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுத்தை உடலை பரிசோதனை செய்தனர்.

இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்ததா? அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்ததா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: