திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோயில் வழக்கு: 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலில் காணாமல் போனதாக கூறப்படும் செப்பு தகடுகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பக்தவத்சல பெருமாள் கோயில் நிலத்தை மீட்க கோரி தொடந்த வழக்கு 7 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயிலின் தாமிர பட்டயத்தையும் 400 ஏக்கர் நிலத்தையும் மீட்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தில் பக்தவத்சல பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விஜயரகுநாத அரசர் 400 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். இந்த நிலம் தற்போது பலரின் வசம் உள்ளது. முறையான குத்தகை வாடகை வசூலிக்கப்படுவது இல்லை.கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம் புனரமைப்பு விபரங்கள் தாமிர பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த தாமிர பட்டயம் தற்போது கோயிலில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்துக்கு இதை அனுப்பியதாகவும் கோயிலுக்கு திருப்பி தரப்படவில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது. உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும், 400 ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கர் நிலம் தான் கோயில் வசம் உள்ளது; மற்றவை தனியார் வசம் உள்ளன. இந்த நிலங்களின் மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். நிலங்களை அளவீடு செய்தால் தான் மீட்க முடியும்.எனவே தாமிர பட்டயத்தை; 400 ஏக்கர் நிலங்களை மீட்க அரசுக்கு அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

Related Stories:

>