×

கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு பிசு பிசுத்தது சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கொல்லிமலை-வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சேந்தமங்கலம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் கூட தடை விதிக்கப்பட்டதால் ஆடிப்பெருக்கு விழா களை இழந்தது. வல்வில் ஓரி சிலைக்கு 15 அமைப்பினை சேர்ந்த தலா 5 பேர் வீதம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சென்றனர்.ஆடிப்பெருக்கு விழாவின்போது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான, வல்வில் ஓரி மன்னனை போற்றும் வகையில் அரசு விழா 2நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது, செம்மேட்டில் வல்வில் ஓரி விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, அனைத்து துறைகள் சார்பில் கண்காட்சி அரங்கு, நாய் கண்காட்சி, வில்வித்தை போட்டிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

இறுதி நாளில் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவார்கள். விழாவை காண உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் விழாவை கண்டு களித்து அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவிகளில் குளித்து விட்டு, கொல்லிமலையில் விளையும் பலா, அன்னாசி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை வீட்டிற்கு வாங்கிச் செல்வர். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2 நாட்களாக கொல்லிமலைக்கு வர வெளியூர் வாசிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால், கொல்லிமலை செல்லும் காரவள்ளி பிரதான சாலை முள்ளுக்குறிச்சி மாற்று சாலையில் போலீசார் சோதனைசாவடிகள் அமைத்து, உள்ளூர்வாசிகள் மட்டுமே சென்றுவர அனுமதிக்கப்பட்டனர்.இதனால், சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நீர்வீழ்ச்சிகள், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கான நேற்று அதிகாலையிலேயே, மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாத்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் முதலில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், அனுமதி வழங்கப்பட்ட நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட 15 தனியார் அமைப்புகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தலா 5 பேர் வீதம் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி, நாமக்கல் ஏடிஎஸ்பி மணிமாறன் தலைமையில் டிஎஸ்பிக்கள் சுரேஷ், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அடுத்தாண்டாவது கொரோனா தொற்று குறைந்து விழா நடத்தப்படுமா என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆடிப்பெருக்கான நேற்று கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் இல்லாததால், செம்மேடு, சோளக்காடு, அரப்பளீஸ்வரர் கோயில் மற்றும் முக்கிய சாலைகளின் ஓரத்தில் பழக்கடைகள் நடத்தி வருபவர்கள் வியாபாரம் இன்றி மிகுந்த பாதிப்பிற்குள்ளாகினர்.

Tags : Chennamangalam: As a precautionary measure against corona, tourists are also banned in Kollimalai.
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...