கோமுகி ஆற்றில் வளர்ந்துள்ள முட்செடிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

சின்னசேலம் :  கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து கோமுகி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் மூலம் சுமார் 5,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் கோமுகி ஆற்றின் கரையோரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த ஆறு கச்சிராயபாளையம், ஏர்வாய்பட்டிணம், மட்டிகைகுறிச்சி, கள்ளக்குறிச்சி, தென்கீரனூர், கூத்தக்குடி வழியாக சென்று கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் கலக்கிறது.

கடந்த காலங்களில் கோமுகி ஆற்றில் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, பள்ளம் தோண்டி குடிநீர் எடுப்பது என ஆற்று நீரை பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் கோமுகி ஆற்றில் கச்சிராயபாளையம் பகுதியில் இருந்து சாக்கடை நீர் கலப்பது, ஏர்வாய்பட்டிணம் எல்லையில் இருந்து சர்க்கரை ஆலை கழிவுநீர் கலப்பது, கள்ளக்குறிச்சி பகுதியில் பல்வேறு கழிவுகளை ஆற்றில் கொட்டுவது என ஆற்றை மாசுபடுத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஆற்றில் பள்ளம் தோண்டி மணல் எடுப்பதால் ஆறு மேடு பள்ளமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் உயிர்பலி சம்பவங்கள் ஏற்படுகிறது. மேலும் கோமுகி ஆற்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை மணல் பாங்காக இருந்தது. ஆனால் தற்போது ஆற்றில் நடுவிலேயே முட்செடிகள், கொரக்கு தண்டு, ஆடுதோடா செடிகள் முளைத்திருப்பது என ஆற்றில் நடக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் ஆற்றில் குளிக்க செல்லவே அச்சமாக உள்ளது. ஆற்றில் முட்செடிகள் முளைத்துள்ளதால் வெள்ளப்பெருக்கின் போது தடை ஏற்பட்டு, அதனால் ஆற்றின் கரைகள் அரிக்கப்படுகிறது. மேலும் தற்போது கோமுகி ஆறு உற்பத்தியாகிற இடத்தில் இருந்தே கள்ளக்குறிச்சி வரை ஆற்றின் இரு கரைகளிலும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. குறிப்பாக கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றுப்பாலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பாளர்களை பொதுப்பணித்துறை கண்டு கொள்வதில்லை.

 

மத்திய அரசு கூவம், அடையாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளை தூய்மைப்படுத்தவும், நீர் மாசுபடுதலை தடுக்கவும் ரூ.908.13 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. ஆகையால் கோமுகி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்திடவும், ஆற்றை தூய்மைப்படுத்தவும், தேவையான இடங்களில் கரைகளை பலப்படுத்திட தடுப்பு சுவர் அமைத்திடவும், கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் தமிழக அரசு தேவையான நிதியை ஒதுக்கி தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: