×

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 1-ஆம் நாள் அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒன்பது மீனவர்களும் இந்தத் தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளனர். சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.

இந்தச் சம்பவம், தமிழ்நாட்டில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்ய வேண்டியது நமது கடமையாகும்.
எனவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,Union Minister of External Affairs ,Sri Lankan Navy ,Tamil Nadu , Letter from the Chief Minister of Tamil Nadu Fishermen, Sri Lanka Navy
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!