திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து டெல்லியில் போராட 60 விவசாயிகள் பயணம்

திருவண்ணாமலை : டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இணைந்து போராட திருவண்ணாமலையில் இருந்து 60 விவசாயிகள் நேற்று புறப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்கவும் தமிழகத்தில் இருந்து விவசாயிகள் செல்கின்றனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 7 பெண்கள் உள்பட 60 விவசாயிகள் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அதையொட்டி, டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை அறிவொளி பூங்கா எதிரில் நடந்தது. இதில் திருவண்ணாமலையில் இருந்து 2 பெண்கள் உட்பட 18 விவசாயிகள் வழியனுப்பப்பட்டனர். அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், வட்டார செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், தொடர்ந்து போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

நேற்று சென்னைக்கு புறப்பட்ட விவசாயிகள், அங்கு ஒருங்கிணைந்து டெல்லிக்கு இன்று புறப்பட உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: