பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நியூயார்க் கவர்னர்!: பதவி விலக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தல்..!!

நியூயார்க்: நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ, அரசு ஊழியர்கள் உட்பட பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் அவரை பதவி விலக்கும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்  கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியில் தங்களை துன்புறுத்தியதாக பல பெண்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புகார்களை தெரிவித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக கவர்னர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றும் பெண் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் உட்பட 179 பேரிடம் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை நடத்தினர்.

இந்த பாலியல் புகார்கள் குறித்து வழக்கறிஞர்கள் மூலமாக சுதந்திரமான விசாரணை நடத்த நியூயார்க்  மாகாண அரசு தலைமை வழக்கறிஞர் லெட்டிடியா ஜேம்ஸ் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் வழக்கறிஞர் குழுவை லெட்டிடியா ஜேம்ஸ் நியமித்தார். இந்த குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் நியூயார்க்  கவர்னர் பல பெண்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணை குழு கடந்த 5 மாதங்களாக மேற்கொண்ட விசாரணையில் கவர்னர் அலுவலக முன்னாள் மற்றும் தற்போதையை பெண் ஊழியர்களை விரும்பத்தகாத வகையில் தொடுதல், தகாத கருத்துக்களை தெரிவித்தல் உள்ளிட்ட வகையில் ஆண்ட்ரூ துன்புறுத்தல் அளித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்ட்ரூ, கூட்டாட்சி சட்ட விதிகளையும், கவர்னர் அலுவலக நடைமுறைகளையும் மீறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விசாரணையின் போது 74 ஆயிரத்திற்கும் அதிகமான ஆவணங்கள், மின்னஞ்சல்கள், வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க்  மாகாண அரசு தலைமை வழக்கறிஞர் லெட்டிடியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே தான் எந்த பெண்ணிடமும் இதுவரை தவறாக நடந்துகொள்ளவில்லை என ஆண்ட்ரூ குவாமோ தெரிவித்துள்ளார்.

கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ நீண்ட நாட்களுக்கு முன்பே பதவி விலகி இருக்க வேண்டும் என நியூயார்க் நகர மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நியூயார்க் மாகாண கவர்னர் சட்டத்தை மதிக்காமல் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருப்பதாக விசாரணை குழு அறிக்கை சமர்பித்திருக்கும் இந்த தினம் நியூயார்க் நகருக்கு மிக மோசமான நாள் ஆகும் என அரசு தலைமை வழக்கறிஞர் லெட்டிடியா ஜேம்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>