திருவண்ணாமலையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான இறுதிக்கட்ட உடல் தகுதித்தேர்வு-எஸ்பி பங்கேற்பு

திருவண்ணாமலை : இரண்டாம் நிலை காவலர் பணிக்கான முதற்கட்ட உடல்தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு, இறுதிகட்ட உடல் தகுதித் தேர்வு நேற்று நடந்தது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், காவல் துறை, தீயணைப்புத் துறையில் பணிபுரிய 2ம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதையொட்டி, ஏற்கனவே நடந்து முடிந்த எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் தற்போது உடல் தகுதித்தேர்வு நடந்து வருகிறது.

அதன்படி. திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கடந்த 26ம் தேதி முதல் திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு நடக்கிறது.முதற்கட்டமாக, சான்றிதழ் சரிபார்த்தல், உயரம், எடை, மார்பளவு உள்ளிட்ட உடற்கூறு அளத்தல் மற்றும் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடந்தன. அவற்றில் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு நேற்று முதல் இறுதிக்கட்ட உடல் தகுதித் தேர்வு தொடங்கியது.

அதன்படி, 340 இளைஞர்களுக்கு நேற்று உடல் தகுதி தேர்வு எஸ்பி பவன்குமார் முன்னிலையில் நடத்தப்பட்டது. அப்போது, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏற்றம் போன்ற உடல் தகுதி திறன்கள் பரிசோதிக்கப்பட்டு, தனித்தனியே மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. வரும் 6ம் தேதி வரை உடல் தகுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன.

Related Stories: