7 பேர் விடுதலை விவகாரம்!: குடியரசுத் தலைவர் எந்த முடிவும் எடுக்காவிட்டால் விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்..அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்..!!

சென்னை: 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எந்த முடிவும் எடுக்காவிட்டால் தமிழக அரசு விரைவில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். சட்ட படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியதாவது, 7 பேர் விடுதலை விவகாரத்தில் மாநில அரசு முடிவு எடுத்து அந்த முடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

ஆளுநர் அதில் தெளிவான விடையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அதை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். அதுதான் தற்போது பிரச்னை. இதை தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவருக்கு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பான பிரச்னை சென்ற பின்னர், அவர் முடிவை அறிவிக்காமல் மாநில அரசு முடிவு எடுப்பது என்பது சரியானதாக இருக்காது என கருதி இந்திய குடியரசுத் தலைவரிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

விரைந்து பரிசீலித்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவை அறிவிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து அதிலும் முடிவு எடுக்கப்படாத சூழல் ஏற்படும் பட்சத்தில் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: