தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு..!!

சென்னை: சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நரம்பியல் மருத்துவர் சுப்பையா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மருத்துவர் சுப்பையா பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சொத்து பிரச்சனையில் மருத்துவர் சுப்பையா கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி சென்னையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.எம்.மோகன் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபிராமபுரம் போலீசார் அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரிபுஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ்  உள்ளிட்ட 10 பேரை கைது செய்தார்கள். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐய்யப்பன் என்பவர் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார். வழக்கின் விசாரணை என்பது முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு நடைபெற்றது.

இந்த வழக்கை எதிர்த்து அவ்வப்போது உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கக்கூடிய முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி அல்லி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தண்டனை விவரம் இன்று மதியம் அல்லது பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>