×

விவசாய நிலத்தில் கழிவுநீரை வெளியேற்றிய 6 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிப்பு

*மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் :  சேலத்தில் விவசாய நிலத்தில் கழிவு நீரை வெளியேற்றிய  6சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சேலம் நெய்க்காரப்பட்டி, காடையாம்பட்டி, குண்டுக்கல், ராமகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சில சாயப்பட்டறைகளில் சுத்திகரிக்கப்படாமல் கழிவு நீரை வெளியேற்றி வருவதாக மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

 அதன்பேரில், மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சேலம் நெய்க்காரப்பட்டியில் செயல்பட்டு வந்த ஒரு சாயப்பட்டறை அனுமதி பெறாமலும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமலும் கழிவுநீரை வெளியேற்றியது கண்டறியப்பட்டது.

இதேபோல், காடையாம்பட்டி அருகே ேஜாடுகுளி பையூரான் கொட்டாய்,ராமகவுண்டனூர், வேடிகவுண்டனூர்ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 5 சாயப்பட்டறைகள் அனுமதி பெறாமல் இயங்கி வந்ததும், சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவுநீரை விவசாய நிலத்தில் வெளியேற்றியதும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக மாவட்டகலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது, பின்னர், கலெக்டரின் உத்தரவின் பேரில்,6 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாமலும், சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் மூடுதல் உத்தரவு அளிக்கப்படும்.வீட்டு உபயோகம், குடோன் போன்றவைகளுக்கு மின் இணைப்பு பெற்று சாயப்பட்டறை நடத்தினால் அபராதம் விதிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படும்,’’ என்றார்.

Tags : Salem, Farmers Land, Dyeing workshop, electricity
× RELATED சேலம் ஆத்தூர் பள்ளிவாசல் அருகில்...