பொதுநிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. பொதுநிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பதாக அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் போன்றவை, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக பேசப்படும் என கூறப்படுகிறது.

நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை, 3 நாட்கள் நடைபெற்றபின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். துறைவாரியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Related Stories: