தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு

*பணிகளை தீவிரப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவு

வேலூர் : தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், பாதுகாப்பான குடிநீரை போதுமான அளவில் வழங்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு, ஜல் ஜீவன் இயக்கத்தைத் தொடங்கி உள்ளது.

இதில் மழைநீர் சேகரிப்பு, நீரை சேமிப்பது, வீடுகளில் பயன்படுத்திய நீரை சுத்திகரிப்பு செய்து திரும்பவும் பயன்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களும் இத்திட்டம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளன. குடிநீரை ஒவ்வொருவரின் முன்னுரிமையாக முன்னிறுத்தி, மக்கள் இயக்கமாக உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியாவில் 24 சதவீதத்தினருக்கு மட்டுமே வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் இணைந்து குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதே ஜல் ஜீவன் இயக்கத்தின் குறிக்கோளாகும். அதன்படி தமிழகத்தில் 2023ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடத்தப்பட்டது.

அத்துடன் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளில் அதற்கான விண்ணப்பங்களும் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக பெறப்படுகிறது. விண்ணப்பம் மற்றும் டெபாசிட் தொகை பெற்றவுடன் பணிகள் நடைமுறைக்கு வரும். நடப்பாண்டு இறுதிக்குள்அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தீவிரப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஊரக பகுதியில் 99 சதவீத பகுதிகளுக்கு குழாய் வழியே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1.26 கோடி வீடுகளில் 21.92 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.5 கோடி வீடுகளில் 40 லட்சம் வீடுகளுக்கு நடப்பாண்டிலும், 36 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டம் வாரியாக ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், 100 சதவீதம் குழாய் வழியே குடிநீர் இணைப்பு வழங்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும், முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: