×

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் 2022 காலண்டர் ஆல்பம் வெளியீடு

சிவகாசி : ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் 2022ம் ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் வெளியிட்டு தயாரிப்பு பணிகளை நிறுவனங்கள் துவக்கின. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக காலண்டர், டைரிகள் தயாரிப்பில், 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தயாராகிறது. காலண்டர் விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு வணிகம் நடக்கிறது.

சிவகாசியில் தினசரி காலண்டர் தயாரிக்கும் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் துவங்கிவிடும். குறிப்பாக, சித்திரை முதல் நாளில் பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் பணிகள் ஆரம்பமாகும். முதலில், நேர பலன்கள், முக்கிய பண்டிகைகள், அரசு விடுமுறைகள் உள்ளிட்ட அம்சங்களுடன் காலண்டர்கள் வடிவமைக்கப்படும். இதன்பிறகு பொன்மொழி, சித்த மருத்துவக்குறிப்புகள், உலகின் முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை சேர்த்து மெருகேற்றப்படும். பின்னர் காலண்டர்களை அச்சிடும் பணிகள் துவக்கப்படும்.

அழகிய வடிவங்களில், கண்கவரும் வண்ணங்களில் காலண்டரின் படங்கள் வடிவமைக்கப்படும். கடவுள் படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் படங்களுடன் காலண்டர் அட்டை படங்கள் தயாரிக்கப்படும். இதனை மேலும் மெருகேற்றும் வகையில் காலண்டர்களின் வண்ணப்படங்கள் ஆர்ட் பேப்பர், பாயில்ஸ், அல்ட்ரா வைலட், கோல்ட் பாயில்ஸ், சில்வர் பாயில்ஸ் உள்ளிட்டவற்றால் தயாராகும். அட்டைகளில் வழக்கமான வடிவங்களுடன் டை கட்டிங் என்ற புதுமையான வடிவமைப்பும் காலண்டர்களை மேலும் அழகாக்கும்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து காலண்டர் ஆர்டர்கள் எடுக்கும் பணிகளை முகவர்கள் துவங்குவார்கள். தீபாவளி பண்டிகையின் போது, காலண்டர் ஆர்டர்கள் பெரும்பாலும் வர துவங்கிவிடும். செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களும் காலண்டர் தயாரிப்பு விறுவிறுப்பாக நடைபெறும். நேற்று ஆடிப்பெருக்கையொட்டி காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் 2022ம் ஆண்டிற்கான ஆல்பத்தை வெளியிட்டு தயாரிப்பு பணிகளை துவக்கின.

காலண்டர் தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘‘சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் புதுமையான வடிவமைப்புகளில், புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த ஆண்டு குழந்தைகளை மகிழ வைக்கும் வகையில்  கார்ட்டூன் படத்துடன் கூடிய ‘குட்டீஸ்’ என்ற  பெயரில் புதியரக  காலண்டர் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. இது அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றனர்.

பட்டாசு விற்பனை துவக்கம்

சிவகாசியில் தீபாவளி சீசனில் வழக்கமாக ரூ.150 முதல் ரூ.200 கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு முடிந்து கடைகள் முழுமையாக செயல்பட்டன. இதனால் பட்டாசு விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா மூன்றாம் அலை காரணமாக எப்போது ேவண்டுமானாலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர். இதனால் பட்டாசு விற்பனை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள முடியாத குழப்பமான மனநிலையில் வியாபாரிகள் உள்ளனர்.

ஆடி பெருக்கு நாளன்று வெளியூர் வியாபாரிகள் தீபாவளி பண்டிகைக்கான கிப்ட் பாக்ஸ் ஆர்டர்களை பட்டாசு கடைகளில் புக்கிங் செய்வது வழக்கம். கொரோனா அச்சம் காரணமாக நேற்று வெளியூர் ஆர்டர்கள் அதிகளவில் வரவில்லை. இதனால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். பட்டாசு வியாபாரி விக்னேஷ்வரன் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வரும் ஆர்டர்கள் இதுவரை வரவில்லை. எப்போது வேண்டுமானலும் ஊரடங்கு போடப்படலாம் என்ற அச்சம் காரணமாக வியாபாரிகள் ஆர்டர்கள் தர தயங்குகின்றனர்.

பட்டாசு கடை உரிமையாளர்களும் கொள்முதல் செய்ய அச்சப்படும் நிலை உள்ளது. எனவே இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு விற்பனை எப்படி இருக்கும் என தெரியாத குழப்பமான நிலையே உள்ளது’’ என்றார்.

25% விலை உயர வாய்ப்பு

காலண்டர் தயாரிப்பாளர் பிரபு கூறுகையில், ‘‘கொரோனாவால் இந்த ஆண்டும் காலண்டர் தயாரிக்கும் பேப்பர், ஆர்ட் பேப்பர், காலண்டர் அட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வருவதில் பல்வேறு தடைகள் இருந்து வந்தது. மேலும் பேப்பர், ஆர்ட் பேப்பர், அட்டை விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு காலண்டர் விலை 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.


Tags : Audipora , Sivakasi, Aadiperuku, Calendar 2022, Cracker sale
× RELATED மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில்...