ஆப்கன் அமைச்சர் இல்லத்தில் தற்கொலைப்படை திடீர் தாக்குதல்!: தீவிரவாதிகள் 4 பேரை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப்படை வீரர்கள்..!!

காபூல்: ஆப்கனிஸ்தானில் பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லத்திலேயே தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கன் அரசின் தற்காலிக பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பு வகிப்பவர் பிஸ்மில்லா கான் முஹம்மதி. நேற்று காபூலில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிட்ட தலிபான் தீவிரவாதிகள், கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டனர். இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களம் போல மாறியது.

தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து காவல்துறையினர், அமைச்சர் பிஸ்மில்லாவையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். இதனால் நூலிழையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் உயிர் தப்பினார். ஆப்கனிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வாஷிங்கடனில் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், தாக்குதல் மற்றும் வன்முறைகளை தலிபான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கனிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லத்தில் தாக்குதல் மேற்கொண்ட 4 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆப்கனிஸ்தான் அமைச்சர்கள் அனைவர் இல்லங்களிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: