திருவாரூர் பக்தவச்சல பெருமாள் கோயில் தாமிர பட்டயம், 400 ஏக்கர் நிலத்தை மீட்க கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோயிலின் தாமிர பட்டயத்தையும், 400 ஏக்கர் நிலத்தையும் மீட்க கோரிய வழக்கில் தமிழக அரசு இன்று விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தஞ்சாவூரை சேர்ந்த விஜயரகுநாத நாயக்கர் என்ற அரசரால் 1608ல் இந்த கோயிலுக்கு 400 ஏக்கர் நிலம் தானமாக கொடுக்கப்பட்டு, தாமிரப் பட்டயம் எழுதி வைக்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் அந்த பட்டயம் இருந்தது. இந்நிலையில், கடந்த 2019 நவம்பர் 11ம் தேதி அந்த தாமிரப் பட்டயம் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. மீண்டும் கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்படவில்லை. தாமிர பட்டயம் மாயமானதுடன், தானமாக கொடுக்கப்பட்ட 400 ஏக்கரில் தற்போது கோயிலின் கட்டுப்பாட்டில் 7 ஏக்கர் மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலத்தை கோயில் செயல் அலுவலரால் கண்டறிய முடியவில்லை.

தாமிரப் பட்டயத்தை கண்டுபிடித்து ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலின் நிலத்தை மீட்க கோரி கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும் நில அளவையரின் உதவியுடன் 400 ஏக்கர் நிலத்தை கண்டறிய மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் பி.முத்துக்குமார் ஆஜராகி, இதுகுறித்து பதில் தரவுள்ளோம் என்றார். இதை ஏற்ற நீதிபதி, நாளை (இன்று) பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: