பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., எஸ்பியை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவு: விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி

விழுப்புரம்: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில், தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி. ஆகியோரை வரும் 9ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசாருக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பாதுகாப்பு அதிகாரி பணியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார்.

அவர் பணியில் இருந்தபோது, பெண் எஸ்.பி ஒருவரை, காரில் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சிறப்பு டி.ஜி.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., டி.ஜி.பி., தலைமை செயலாளர் ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. இதன்பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர், சிறப்பு டி.ஜி.பி., அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின், இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், 120க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 23ம் தேதி விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பூர்ணிமா முன்பு பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதன்பின், கடந்த 29ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார், சிறப்பு டி.ஜி.பி., எஸ்.பி. ஆகியோர் மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பொதுநல வழக்கில், சிறப்பு டி.ஜி.பி.மீதான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். டிசம்பர் 20ம் தேதிக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். 23ம் தேதி வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, விழுப்புரம் கோர்ட்டில்  நேற்று விசாரணை நடந்தது. அப்போது, சிபிசிஐடி போலீசாரின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றுகொண்டு வரும் 9ம் தேதி சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகிய இருவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என்று சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, சிறப்பு டிஜிபிக்கு உதவியதாக, மேலும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: