அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் ஆவேசம் கல்குவாரி லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம்,  உத்திரமேரூர் வட்டம் காவாந்தண்டலம் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் அருகே, மாகரல் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் இருந்து காவாந்தண்டலம் வழியாக சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்பட பல பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கட்டுமான பொருட்களான எம்சாண்ட் எடுத்து செல்லப்படுகிறது. அந்த லாரிகளில், விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கொண்டு செல்வதாகவும், வேகமாக செல்வதால் மேற்கண்ட பகுதிகளில் அடிக்க விபத்துகள் ஏற்பட்டு உயிரிப்பு சம்பவங்கள் நடப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும், ஜல்லி மற்றும் எம்சாண்ட் கொண்டு செல்லும்போது, முறையாக தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், காற்றில் துகள்கள் பறந்து அப்பகுதி மக்களுக்கும், பின்னால் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களிலும் விழுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி விபத்தை சந்திக்கின்றனர். இதில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு, சுவாச கோளாறு மற்றும் வாகன வேகமாக செல்வதால் விபத்து நடைபெறுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறுகின்றனர். குறிப்பாக காற்றில் பறக்கும் மண், கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள உணவு பொருட்களிலும் கலப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், காவாந்தண்டலம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை திரண்டனர். அப்போது, அவ்வழியாக எம்சாண்ட் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது. தகவலறிந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி முருகன், சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச  பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, 24 மணி நேரமும் செல்லும் லாரிகளால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு சுவாச கோளாறு பிரச்னைகளால் தவித்து வருகிறோம். அடிக்கடி வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பு மற்றும் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை உள்ளது. இனியும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: