விவாகரத்து கேட்டதால் ஆத்திரம் மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது

ஆவடி: திருநின்றவூர் பெரியார் நகரை சேர்ந்தவர் அமர்நாத்(34). சலூன்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா(28). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தம்பதிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அமர்நாத் மனைவி, குழந்தைகளை பிரிந்து பாக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். திவ்யா, அமர்நாத்திடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் மனைவி மீது அமர்நாத் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அமர்நாத், திவ்யாவை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அங்கு தம்பதிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அமர்நாத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யாவை சரமாரியாக வெட்டினார். தலையில் பலத்த காயமடைந்த திவ்யா, ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனை பார்த்த அமர்நாத் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பின்னர், உறவினர்கள் திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். புகாரின்பேரில், திருநின்றவூர் போலீசார் அமர்நாத்தை நேற்று கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>