திருட்டில் ஈடுபட்ட வாலிபர் திருந்தி வாழ அனுமதி கேட்டு போலீஸ் எஸ்பியிடம் மனு

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு சமத்துவபுரம் மேட்டுக்கடை மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழ் (எ) தமிழரசன்(27). இவர் தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவின் விவரம் வருமாறு: நான் மப்பேடு சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது தாய், தந்தையர் இருவரும் இறந்துவிட்டனர். நான் எனது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறேன். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறு, சிறு திருட்டில் ஈடுபட்டு வந்தேன். அதற்காக மப்பேடு போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். நான் சிறையில் இருந்து வந்தவுடன் எந்த ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து வருகிறேன்.

இருப்பினும் நான் செய்யாத தவறுக்கெல்லாம் என் மீது செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், கடம்பத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதியப்பட்டு பல ஆண்டுகாலமாக சிறையில் இருந்தேன். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மேலும் எனது உறவினர்களையும் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட நான் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். தற்போது நான் கட்டிட கூலி வேலைக்கு சென்று வருகிறேன். திருமணம் செய்து குடும்பத்தாருடன் வாழ விரும்புகிறேன். எனவே நான் திருந்தி வாழ எனக்கு ஒரு வாய்ப்பு அளித்து மீண்டும் என் மீது பொய் வழக்கு போடாமல் இருக்க உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறயிருந்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உரிய விசாரணை நடத்தி அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories: