ஜேஎன்யூ வன்முறை குறித்து எடுத்த நடவடிக்கை என்ன? திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்துள்ளார். மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு எழுத்துப்பூர்வமாக கேள்விகள் எழுப்பி இருந்தார்.

* டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? டெல்லி போலீசார் மற்றும் ஒன்றிய அமைப்புகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பதன் விவரங்கள்,

* இது தொடர்பாக இதுவரை யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா? அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தால் ஏதேனும் விசாரணை அறிக்கை வழங்கப்பட்டதா? அதன் விவரங்கள்? - ஆகிய கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் கடந்த ஜனவரி 2020ம் ஆண்டு நடந்த வன்முறை தொடர்பாக டெல்லியின் வசந்த் கன்ஜ் (வடக்கு) காவல் நிலையத்தில் கிரைம் பிராஞ்ச் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு 3 வழக்குகள் பதிவு செய்திருப்பதாக டெல்லி போலீசார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாட்சியங்களை விசாரித்தது, சிசிடிவி பதிவுகளை சேகரித்து பரிசோதித்தது, சந்தேகத்துக்குரியவர்களை கண்டுபிடித்து ஆய்வுக்கு உட்படுத்தியது என விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என டெல்லி காவல்துறை பதில் அளித்துள்ளது. இவ்வாறு நித்யானந்த் ராய் கூறியுள்ளார். உள்துறை இணையமைச்சரின் பதிலில் திருப்தி அடையாத தயாநிதி மாறன் தனது டிவிட்டரில், ``ஒன்றரை ஆண்டுகளான பின்பும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு நீதி வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது,’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: