திறமையற்ற வினியோக அமைப்பால் ஏழைகளுக்கு ரேஷன் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு

அகமதாபாத்: ``திறமையற்ற ரேஷன் வினியோக அமைப்பினால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அதன் முழுப்பயன்கள் ஏழைகளுக்கு கிடைக்கவில்லை,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குஜராத் மக்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது: பிரதமரின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று கால கட்டத்தில் லட்சக்கணக்கான ஏழைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், மிக குறைந்த அளவிலான ஏழைகள் மட்டுமே இதன் பயனை பெற்றுள்ளனர்.

ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த அரசு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு, ஒவ்வொரு அரசும் குறைந்த செலவில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும் என்று உறுதி அளித்தன. இதற்கான நோக்கம், பட்ஜெட் விரிவடைந்ததே தவிர, அதற்கான செயல் திட்டங்கள் அதே அளவில் தான் இருந்தன. சமீப காலமாக உணவு பாதுகாப்பு அதிகரித்துள்ளது. ஆனால் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு அந்த விகிதாசாரத்திற்கு ஏற்ப குறையவில்லை. ஒரு சிலரின் சுய நலத்தினாலும், திறமையற்ற வினியோக அமைப்பினாலும் இத்திட்டம் பலவீனமடைந்தது. இதனால் இதன் முழுப்பயன்கள் ஏழைகளுக்கு கிடைக்கவில்லை.

கடந்த 2014ம் ஆண்டிற்கு பின்னர், கோடிக்கணக்கான போலியான பயனாளர்கள் அடையாளம் காணப்பட்டு இலவச ரேஷன் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ரேஷன் கார்டு உடன் ஆதார் அட்டையை இணைக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்க அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தற்போது உள்கட்டமைப்பு பணிகளுக்காக அரசு கோடி கணக்கில் செலவிடுகிறது. இதன் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: