11வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: பெகாசஸ், வேளாண் சட்டம் விவகாரம் குறித்து விவாதிக்க கோரியும், விவாதிமன்றி மசோதாக்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நேற்று 11வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. பெகாசஸ் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, கடந்த 10 நாட்களாக தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. நேற்று 11வது நாளாக கூட்டம் தொடங்கியது. மக்களைவை காலை 11 மணிக்கு கூடியதும், பெகாசஸ், வேளாண் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நண்பகல் 12 மணிக்கும், பின்னர் பிற்பகல் 2 மணி மற்றும் மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

 அமளிக்கு இடையே பாதுகாப்பு சேவைகள் மற்றும் தீர்ப்பாயங்கள் சீர்த்திருந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது போல அரசு தொடர்ந்து மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் ஆர்எஸ்பி எம்பி என்.கே.பிரேம்சந்திரன் ஆகியோர், ‘சபை ஒழுங்காக இல்லாதபோது மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது. எந்த மசோதாவும் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு சரியான விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்றனர்.

இதேபோல், மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் பெகாசஸ், வேளான் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, கையில் பதாகைகள் ஏந்தியபடி கோஷமிட்டனர். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சில பிரச்னைகள் குறித்து விவாதிக்க விதிகள் 267ன் கீழ் நோட்டீஸ் கொடுத்தனர். அதை சபாநாயகர் வெங்கையாநாயுடு ஏற்க மறுத்துவிட்டார். இதனால், சபாநாயகர் மீது அதிருப்தியடைந்த எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை முதலில் 12 மணிக்கும், தொடர்ந்து 12.40 மற்றும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமளிக்கு இடையே திவால் மற்றும் திவால் குறியீடு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  

கோவிஷீல்டு 12 கோடி உற்பத்தி

* வரும் டிசம்பருக்குள் மாதாந்திர உற்பத்தி திறன் கோவிஷீல்டு 12 கோடி டோசுக்கு அதிகமாகவும், கோவாக்சின் 5.8 கோடி டோசும் அதிகரிக்கும் என்று தடுப்பூசி உற்பத்தியாளர்களின் தகவலை மேற்கோள் காட்டி மாநிலங்களவையில் அரசு தெரிவித்துள்ளது.

* ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில், எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கடைபிடிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் பிப்ரவரியில் ஒப்புக் கொண்டதிலிருந்து ஆறு முறை மட்டுமே விதிமீறி துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: