உலகம் முழுவதும் பாதாளத்தை நோக்கி பவள பாறைகள்: கடலின் வெப்பநிலை அதிகரிப்பு

துபாய்: புவி வெப்பமயமாதலால் பல்வேறு இயற்கை பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தற்கால உலகின் கார்பன் உள்பட பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டின் அளவு அதிகரிப்பால் இயற்கை சூழல் பாதிப்படைந்து வருகிறது. கடலின் வெப்பநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வெப்ப நிலை அதிகரித்து கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து, கடல் வாழ் உயிரினங்களைப் பாதித்து வருகிறது. குறிப்பாக பவள பாறைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மேலும் கடல் மாசடைதல் , வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் உலகம் முழுவதும் கடல் பவள பாறைகள் ஆபத்தில் இருப்பதாக‌ அமெரிக்காவில் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் எச்சரித்துள்ளது.

உலகின் கவின் மிகு பவள பாறைகள் நிறைந்த கடல் பகுதிகளாக‌ஆஸ்திரேலியா, மாலத்தீவு , பிஜி, இந்தோனேசியா, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட கடல் பகுதிகள் திகழ்கிறது. உலகின் மிக நீளமான பவளப்பாறை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாண கடல் பகுதியில் உள்ளது. இது ‘கிரேட் பேரியர் பவளப்பாறை’ என அழைக்கப்படுகிறது. 2,300 கி.மீ., துாரம் வரை பரவியுள்ளது. அதே போன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பவள பாறைகள் நிறைந்த‌ பகுதியாக இந்தியாவில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதி திகழ்கிறது. இங்கு பவளப் பாறைகள் அழிந்து வருவதால், கடலின் வெப்பநிலை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

கடல் வாழ் உயிரனங்கள் வாழ்வதற்கு  பவளப்பாறைகளும் முக்கியமானதாக திகழ்கிறது. கடலின்  அளவில் 0.1 சதவீதம் பவளப்பாறைகள் உள்ளன. இவை பெரும்பாலான‌ கடல் உயிரினங்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. மேலும் மிக முக்கியமாக கடல் அரிப்பு மற்றும் சுனாமி போன்றவற்றிலிருந்து தீவுக‌ளை பாதுகாப்பதில் அரணாக திகழ்கிறது. பவள பாறைகள் கடலில் 20°செ  முதல் 24°செ. வெப்ப நிலையில் செழித்து வளர்கிறது. இந்த வெப்ப நிலை அதிகரிக்கும் போது அவை அழியும் சூழலுக்கு ஆளாகிறது.

உலகில் 1970களில் இருந்ததைவிட 50 சதவீதம் பவளப் பாறைகள் குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கார்பன் வெளியீட்டால் கடலில் வெப்பம் அதிகரித்தல், கடல் மாசடைதல், உள்ளிட்டவற்றை குறைத்தால் பவள பாறைகளை பாதுக்கலாம் இல்லை எனில் 2100ல் கடலில் பவளப்பாறைகள் இல்லாமல் போய் விடும் என ஏற்கனவே ஹவாய் பல்கலைகழ‌க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச அளவில் பவள பாறைகளை பாதுகாக்க ஐநா சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>