மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீரன் சின்னமலையின் கனவை நனவாக்க திமுக அரசு தொடர்ந்து செயலாற்றும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: ‘‘மக்களின் வரிப்பணம், ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்’’ என்ற தீரன் சின்னமலையின் கனவை நனவாக்கிடும் உறுதியுடன் திமுக அரசு தொடர்ந்து செயலாற்றும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருவுருவச் சிலையின்கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், எ.எம்.வி.பிரபாகர்ராஜா எம்எல்ஏ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தன்னலமற்ற பொதுச்சேவைக்கும், தனிச் சிறப்பான நாட்டுப்பற்றுக்கும் தகுதிமிக்க அடையாளமாகத் திகழும் தீரன் சின்னமலையின் 216-ஆவது நினைவு நாள். அவரது தீரம் அளப்பரியது; பெருமைக்குரியது. ஏழைகளுக்காக வரிப்பணத்தை வழிமறித்துக் கைப்பற்றிய போது, “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’’ என்று துணிச்சலாகச் சொன்னவர் அவர். இளைஞர்களின் எழுச்சி நாயகரான அவருடைய புகழ் பாடும் வகையில்-முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது தான், அவருக்கு சென்னை கிண்டியில் சிலை வைக்கப்பட்டது. கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து-கொங்குப் பகுதி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் வாய்ப்புகள் உருவாக்கியதும் முத்தமிழறிஞர் கலைஞர் தான்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்த நேரத்தில் தான், 31.7.2005 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஆங்கிலேய அரசுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கி, தூக்குக்கயிற்றை முத்தமிடும் நேரத்திலும் சிங்கமென வாழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தீரத்தையும் நாட்டுப்பற்றையும் நாமும் பெறுவோம். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருப்பதே தீரன் சின்னமலைக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். ‘மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்’ என்ற தீரன் சின்னமலையின் கனவை நனவாக்கிடும் உறுதியுடன் திமுக அரசு தொடர்ந்து செயலாற்றும் என்ற உறுதிகூறி “வாழ்க அவரது புகழ்” எனப் போற்றுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: