கோயில்களில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி: வழிகாட்டு நெறிமுறை கடுமையாக பின்பற்ற ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை:  மூன்று நாட்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் கோயில்களில், இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. கோயில்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரத்தில் மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களை கண்டறிந்து அந்த இடங்களை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

தொடர்ந்து மாநிலம் முழுவதும் மக்கள் கூடும் இடங்கள் கண்டறிந்து மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா மற்றும் அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம் என பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா எளிதில் பரவக் கூடும் என்பதை அடிப்படையாகக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் 3 நாளுக்கு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பிரசித்தி பெற்ற கோவில்களில் கடந்த 1ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன.  அதேநேரத்தில் கோயில்களில் அர்ச்சகர் மூலம் பூஜை நடந்தது.

இந்தநிலையில், பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கோயில் முழுமையாக சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இந்தநிலையில் முறையான வழிகாட்டு நெறி முறையை பின்பற்றி இன்று முதல் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோயில்களில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவும், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கவும் அந்தந்த கோயில் நிர்வாகிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Stories: