போலி நிறுவனங்களை களையெடுக்க 100 பறக்கும் படைகள் அமைப்பு: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: போலி நிறுவனங்களை களையெடுக்க 100 பறக்கும் படைகள் அமைக்கப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.  வணிகவரித்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை எழிலக வளாகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, ஆணையர் சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பிறகு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: வணிகவரித்துறை நுண்ணறிவு சார்பில் கண்டறியப்பட்ட குற்றங்கள் மூலம்  ரூ.1.74 கோடி  தவறு செய்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  பதிவு சான்றிதழ் இல்லாமல் தொழில் செய்பவர்கள், தொழிலே செய்யாமல் போலி பில் வைத்துள்ளவர்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் மூலம் பதிவு சான்று இல்லாமல் செயல்பட்ட 503 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் வணிக வரித்தொகையை வசூலிக்கவும், இதுவரை சேராதவர்களை சேர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரைபோலியாக இதுபோல் செய்தவர்களை கண்டறிந்து 10 நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். காவல்துறை மூலமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  போலி நிறுவனங்களை களையெடுக்க பறக்கும் படை 50ல் இருந்து 100 ஆக உயர்த்த உள்ளோம்.  

Related Stories: