தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (33). இவருக்கு, கடந்த 2018ம் ஆண்டு நொளம்பூரை சேர்ந்த கிஷோர் பிரபு (43) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அப்போது கிஷோர் பிரபு, தான் புதிதாக கல்வி நிறுவனம் தொடங்க இருப்பதாகவும், அதில் தங்களை பங்குதாரராக சேர்ப்பதாகவும், முகமது அலியிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அவர் ரூ.44.10 லட்சத்தை கிஷோர் பிரபுவிடம் கொடுத்துள்ளார்.  ஆனால், அவர் பல மாதங்களாகியும் கல்வி நிறுவனம் தொடங்கவில்லை. இதனால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, முகமது அலிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர், அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, கிஷோர்  பிரபுவை நேற்று முன்தினம்  கைது செய்து,  அவரிடம் இருந்து ஒரு காரை பறிமுதல் செய்தனர்.   கைது செய்யப்பட்ட கிஷோர் பிரபு மீது, ஏற்கனவே வில்லிவாக்கத்தில் 3 பண மோசடி வழக்குகளும், வேப்பேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல பண மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இவர், கல்வி நிறுவனம், தொழில் தொடங்கலாம் எனக்கூறி பலரிடம் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: