சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 2 பேருக்கு இரட்டை ஆயுள்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (39), இளங்கோவன் (37). இவர்கள் இருவரும், 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு பெண் குழந்தையை கடத்தியுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதையடுத்து, அந்த சிறுமியை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நவாஸ் மற்றும் மின்ட் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோரிடம் பணத்துக்கு விற்பனை செய்துள்ளனர். தொடர்ந்து அந்த சிறுமியை, அவர்கள் இருவரும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி கடத்தல் தடுப்புப் பிரிவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2014ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து, குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்து வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணவேணி, இளங்கோவனுக்கு தலா இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதேபோல, நவாஸ் மற்றும் ஸ்டாலின் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Related Stories: