2018 முதல் அதிமுக ஆட்சி காலத்தில் தரமற்ற மருந்து வாங்கி முறைகேடு: பல கோடி சுருட்டியது அம்பலம்

திருச்சி: அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தரமற்ற மருந்துகள் வாங்கப்பட்டு பல கோடி சுருட்டியது அம்பலமாகி உளளது. இந்த மருந்துகளை உடனடியாக திரும்பப் பெற மருந்து நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 24 மருத்துவ கல்லூரிகள், 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், ஒரு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு, ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்டத்தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம், வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம்தான் வாங்கப்படும். இதைத்தவிர்த்து மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவைகளும் வாங்கப்படும். இதில் குறிப்பாக மருந்துகள் வாங்கும்போது பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த ஆண்டு நிலவரப்படி 315 அத்தியாவசிய மருந்துகள், 366 மருத்துவ அறுவை மற்றும் தையல் நுகர் பொருட்கள், 517 சிறப்பு மருந்துகளை அரசு மருத்துவ நிறுவனங்களுக்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மருந்துகள் பயன்பாட்டின் அடிப்படையில், குறைந்தபட்ச இருப்பு 3 மாதம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்றார் போல் தேவைக்கேற்ப மட்டுமே கொள்முதல் செய்து அந்தந்த மாவட்ட வாரியாக உள்ள 32 மருந்து கிடங்குகளில் இருப்பு வைத்து வழங்கப்படுகிறது. இவ்வாறு பல மருந்து விநியோக நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு மருந்துகள் வாங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் முதல் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தின் மூலம் வாங்கப்பட்ட மருந்துகளில் தரம் இல்லாத மருந்துகளை வாங்கி பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த மருந்துகளை திரும்ப எடுத்து கொள்ளுமாறு மருத்துவ விநியோக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மருந்து விநியோக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அந்தந்த மாவட்ட மருந்து கிடங்குகளில் உள்ள தரமற்ற மருந்துகளை திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தும் விநியோக நிறுவனங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் மற்ற மருந்துகளை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே இறுதியாக மாவட்ட மருத்துவ கிடங்குகளில் உள்ள தரமற்ற மருந்துகளை வரும் 15ம் தேதிக்குள் உங்களின் சொந்த செலவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்துகளை அனுப்புவதற்கு முன்பாக மருந்து எடுத்து கொண்டு செல்லும் நபர் பெயர், கொரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் இ-மெயில் முகவரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாவிடில் அந்த மருந்துகள் அனைத்தும் அழிக்கப்படும். இதற்கான தொகை சம்பந்தப்பட்ட மருந்து விநியோக நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>