×

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா? சென்னையில் அதிமுக நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனை: இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் அனைத்து தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வார்டுவரையறை செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை, உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்கள். அதிமுக கட்சி நிர்வாகிகளின் தொடர் நெருக்கடியால் அதிமுக தலைமை, பாஜவை கூட்டணியில் கழட்டிவிட முடியாமல் தவித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் உள்ள அதிமுக செயலாளர்களுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் தொடர்ந்து 4 நாட்கள் நடத்தவும், ஒவ்வொரு நாளும் 9 மாவட்ட அதிமுக செயலாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்த போட்டியிடலாமா? கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. முக்கியமாக, ஊரக உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த அதிமுக மாவட்ட செயலாளர்களே தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க அதிகாரம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags : AIADMK ,Chennai ,EPS ,OPS , Will AIADMK stand alone in local elections? AIADMK executives in Chennai today held an urgent consultation: EPS, OPS led
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...