கொரோனா 3ம் அலை தடுப்பு நடவடிக்கையில் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் ஜரூர்: சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு

சின்னாளபட்டி: கொரோனா 3ம் அலையை கட்டுப்படுத்தும் பணியில் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் ஜரூராக ஈடுபட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் ‘திருவிளையாடல்’ பட பாணியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சியில் சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கொரோனா தொற்று 2ம் அலை துவங்கியவுடன், நோய் பரவலை தடுக்க சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது.

இதனால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால், கொரோனா இல்லாத பேரூராட்சியாக சின்னாளபட்டி மாறியது. இந்நிலையில் தற்போது கொரோனா 3ஆம் அலை அச்சுறுத்தலால், பேரூராட்சி நிர்வாகம் அதிரடி தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதையொட்டி வீடு, வீடாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் மத்தியில் சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் ‘திருவிளையாடல்’ திரைப்பட பாணியில் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், பேரூராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டையும் பெற்று தந்துள்ளது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி கூறுகையில், ‘‘ஆத்தூர் தொகுதி மக்களின் பாதுகாவலராக உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவின்பேரில் சின்னாபட்டியில் சிறப்பான முறையில் கொரோனா தொற்று ஒழிப்பு பணிகளை செய்து வருகிறோம்.

வீடு தவறாமல் துண்டு பிரசுரங்கள் வழங்குவதுடன், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும் ஒட்டி வருகிறோம். கொரோனா தொற்று ஒழிப்பு பணிக்கு செல்லும் முன்கள பணியாளர்களுக்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதால், எங்களால் சுகாதாரப் பணிகளை முழுமையாக செய்ய முடிகிறது’’ என்றார்.

Related Stories: