நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம்: புதுச்சேரியில் ஒன்று செயல்படுகிறது

புதுடெல்லி: புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ம் தேதி தொடங்கி நடந்து வரும்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில்,  ‘மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி, நாடு முழுதும் 24 போலி பல்கலை கழகங்கள் இயங்கி வருவதாக யுஜிசி எனப்படும் பல்கலை கழக மானியக்குழுவால் கண்டறியப்பட்டுள்ளது. யுஜிசி-யின் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் 2 பல்கலை கழகங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

நாடு முழுவதும் செயல்படும் போலி பல்கலைக் கழகங்களில் உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 8 பல்கலைக்கழகங்கள், டெல்லியில் 7 பல்கலைக்கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 2 பல்கலைக்கழகங்கள், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேற்கண்ட போலி பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் தெரிவித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: