தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்; டெல்லி சுடுகாட்டில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை: தாயை பயமுறுத்தி சடலத்தை எரித்த பூசாரி உட்பட 4 பேர் கைது

புதுடெல்லி: டெல்லியில் சுடுகாட்டிற்கு தண்ணீர் பிடிக்க சென்ற 9 வயது சிறுமியை 4 பேர் கும்பல் பலாத்காரம் செய்த நிலையில், அவர்கள் சிறுமியின் தாயை பயமுறுத்தி உடலை எரித்த கொடூரம் நடந்துள்ளது. தலைநகர் டெல்லியின் கான்ட் பகுதியை அடுத்த பழைய நங்கல் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, தனது  பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி நேற்று  முன்தினம் மாலை 5 மணியளவில், சுடுகாட்டு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் பிடிக்க சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது மகள் மாயமானது குறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர். அதையடுத்து, பலரும் சிறுமியை தேடிவந்தனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு மேல், சிறுமியின் தாய் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்குச் சென்று தேடி பார்த்தார். அப்போது, அங்கிருந்த பூசாரி சிறுமியின் தாயிடம், ‘உங்களது மகள் தண்ணீர் பிடிக்க வந்தார். அப்போது, தண்ணீர் தொட்டியில் இருந்த மின் ஒயரை தொட்டதால், அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார்’ என்றார். அதிர்ச்சியடைந்த தாய், தனது மகள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து பதறினார்.

பின்னர், மகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார். அதற்கு அந்த பூசாரி, ‘சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்தால், அவரது உடல் உறுப்புகளை வெட்டி எடுப்பார்கள்’ என்று கூறினார். இதனால் பயந்த தாய், வேறு என்ன செய்வது என்று பூசாரியிடம் கேட்டார். அதற்கு அவர், ‘உங்களது மகளை சுடுகாட்டிலேயே எரித்துவிடுவதுதான் நல்லது’ என்றார்.

இதற்கு தாய் சம்மதம் தெரிவித்ததால், சிறுமியின் உடல் தீயில் எரியூட்டப்பட்டது. சுமார் 2 மணி நேரம் சிறுமியின் உடல் எரிந்த நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சுடுகாட்டிற்கு வந்தனர்.

நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்த போலீசார் தீயில் கருகிய சிறுமியின் உடலை கைப்பற்றினர். அதில், சிறுமியின் கால்கள் மட்டுமே  எஞ்சியிருந்தன. மற்ற உறுப்புகளின் பெரும்பகுதி தீயில் எரிந்த நிலையில் இருந்தது. தொடர்ந்து, எரிந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தடயவியல் குழுவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தண்ணீர் தொட்டி அறையில் இருந்த மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார், பூசாரி மற்றும் அவருடன் சேர்ந்த மூன்று நண்பர்களிடம் விசாரித்தனர்.

அவர்கள் ‘புல்’ போதையில் இருந்தனர். சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சுடுகாட்டில் நள்ளிரவு வரை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள், பூசாரி மற்றும் அவரது 3 நண்பர்கள் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக கூறினர். அதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்ததால் அவர்கள் மீது ஐபிசி 304 ஏ, 342, 201 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இறந்த சிறுமியின் உடல் 90 சதவீதத்திற்கு எரிந்துவிட்டதால், தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, பின்னர் சிறுமியின் உடலை எரித்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

Related Stories:

>