×

இந்தியா-இங்கி. முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

நாட்டிங்காம்: கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் நாளை நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு டெஸ்ட் தொடங்குகிறது. இது 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் படுதோல்வி அடைந்த இந்தியா அதில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

கடந்த ஒன்றரை மாதமாக ஓய்வில் இருந்த வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். காயம் காரணமாக மயங்க் அகர்வால் முதல் டெஸ்ட்டில் விலகிய நிலையில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக ஆடுகிறார். மறுபுறம் இங்கிலாந்து சொந்த மண்ணில் கடைசியாக நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது. இருப்பினும் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக உள்ளது. ஜோ ரூட், பட்லர், பேர்ஸ்டோவ், கோரி பர்ன்ஸ், ஜாக் க்ராலி என முன்னணி வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார்கள்.

இந்திய உத்தேச அணி: ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், புஜரா, கோஹ்லி, ரகானே, ரிஷப் பன்ட், அஸ்வின், ஜடேஜா அல்லது விகாரி, இசாந்த்சர்மா அல்லது முகமது சிராஜ், ஷமி, பும்ரா. நேருக்குநேர்: இரு அணிகளும் இதுவரை 126 டெஸ்ட் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 29, இங்கிலாந்து 48 போட்டிகளில் வென்றுள்ளன. 49 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக ஆடிய 5 டெஸ்ட்டில் இந்தியா 3, இங்கிலாந்து 2ல் வென்றுள்ளன. கடந்த முறை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 இந்தியா இழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : India , India-Eng. The first Test starts tomorrow
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!