இளம்பெண் தற்கொலை : கணவர் கைது

தாம்பரம்: சென்னை பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் (25). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்னேகா (19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. பிரமோத், மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரதட்சணை தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு சேலையூர், ரங்கநாதன் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஸ்னேகா  சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு செல்போனில் ஸ்னேகாவுடன் தொடர்பு கொண்டு பிரமோத் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்த ஸ்னேகா தனது அறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஸ்னேகாவின் பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு  பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். சேலையூர் போலீசார், ஸ்னேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, வரதட்சணை கொடுமையால் தனது மகள் ஸ்னேகா தற்கொலை செய்துகொண்டார் என  அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி போலீசார் பிரமோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்னேகாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

>