பெகாசஸ் விவகாரத்தை தொடர்ந்து எல்பிஜி கேஸ் விலை உயர்வு: எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ஒருநாள் கூட நாடாளுமன்றம் சரியாக செயல்படாத சூழ்நிலை தான் இருந்து வருகிறது. பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசே நடத்தியுள்ள செயலாக இருக்கிறது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் வாதம் நடத்த வேண்டும். விவாதத்தின் போது பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நாடாளுமன்றம் 12 நாட்கள் நடைபெற்றுள்ளது. 12 நாட்களில் ஒருநாள் கூட சரியாக இயங்காத சூழ்நிலையில் தான் இன்று எதிர்கட்சிகள் ஒன்றாக கூடியுள்ளனர். 14 எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றாக கூடி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, திமுக சார்பில் கனிமொழி எம்.பி, சிபிஎம் சார்பில் வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏற்கனவே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் அழுத்தத்தையும், போராட்டத்தையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போதைய சூழ்நிலையில் விலைவாசி உயர்வு என்பது கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எல்.பி.ஜி கேஸ் விலை உயர்வு, கடந்த பல நாட்களாக சிலிண்டரின் விலை அதிகரித்து கொண்டிருப்பதால் ஏழைமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டுள்ளனர்.

எல்.பி.ஜி கேஸ் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே இதை தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் இதுதொடர்பான பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்.பிக்கள், நிர்வாகிகள் ஆகியோர் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி நடத்துகின்றனர். மத்திய அரசை பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருவதால் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் சென்றுகொண்டுள்ளது. அதேசமயத்தில் எதிர்கட்சிகள் கூச்சல், குழப்பங்களுக்கு இடையே பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி கொண்டுள்ளது. ஆனால் சரியான முறையில் நடைபெறாத ஒரு சூழ்நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் மத்திய அரசு இருந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தற்போது பெகாசஸ் விவகாரத்தை தொடர்ந்து எல்.பி.ஜி கேஸ் விலை உயர்வையும் தற்போது எதிர்கட்சிகள் கையில் எடுத்துக்கொண்டுள்ளன. இந்த பிரச்சனையும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Stories:

>