அமெரிக்காவில் தீவிரமடையும் உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவல்!: டிரைவ் - இன் தடுப்பூசி மையங்களுக்கு மக்கள் படையெடுப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. தடுப்பூசி நடவடிக்கைகளை அமெரிக்க அரசு முழு வீச்சில் அமல்படுத்தி இருந்தாலும் பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் அமெரிக்காவில் 55,899 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புளோரிடா, டெக்சாஸ், கலிஃபோர்னியா ஆகிய மாநிலங்களில் தினசரி தொற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒருநாள் தொற்று 44 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொற்றுநோய் தடுப்பு இயக்குநர் ரோச்சல் தெரிவித்ததாவது, கடந்த சனிக்கிழமை கிடைத்துள்ள ஒரு வார தரவுகளின்படி சராசரியாக நாள் ஒன்றுக்கு 72,000 பேருக்கு தொற்று பரவுகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 44% தொற்று அதிகரித்து இருக்கும் அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. கடந்த கோடை காலத்தில் இருந்ததை விட தொற்று அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். தினசரி தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களில் தடுப்பூசி நடவடிக்கைகளை ஜோ பைடன் அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. கொரோனா பரவல் அதிகம் உள்ள புளோரிடாவில் பல்வேறு இடங்களில் திறந்தவெளி டிரைவ் - இன் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

புளோரிடாவில் தொற்று வேகம் எடுத்துள்ளதால் மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் தடுப்பூசி மையங்களில் கார்களின் நீண்ட வரிசை காணப்படுகிறது. கலிஃபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், ஜார்ஜியா, வடக்கு கரோலினா உள்ளிட்ட மாநிலங்களிலும் தடுப்பூசி நடவடிக்கைகளை துரிதப்படுத்த அமெரிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் தற்போதும் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 3 கோடியே 58 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>