சென்னை தொழிற்சாலையில் பதுக்கிய 5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சித்தூர்:  சென்னை தொழிற்சாலையில் பதுக்கிய 5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.  ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சித்தூர் மாவட்டம், பீலேரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிபிரசாத், ஸ்வேதா மற்றும் போலீசார் சின்னகுட்டிகல்லு அடுத்த தேவர்கொண்டா குடி கிராமம் அருகே கடந்த 31ம் தேதி மாலை 5 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, காரில் இருந்து தப்பியோட முயன்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், காரை சோதனை செய்தபோது 8 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 ேபரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை சேர்ந்த அசோக்குமார், ஷங்கர்,  சென்னை அடுத்த அம்மா நகர் ரெட் இல்ஸ் பகுதியை சேர்ந்த மனோஜ்.  சித்தூர் மாவட்டம் சந்திரகிரி அடுத்த ஐதேப்பள்ளியை சேர்ந்த தயானந்தா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கூலியாட்களை வைத்து செம்மரங்களை வெட்டி காரில் கடத்தி விற்பனை செய்கின்றனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலம், சென்னை அடுத்த ஆவடியில் பில்லா டேங்க் தொழிற்சாலையில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆவடிக்கு சென்று 11 டன் எடையுள்ள 380 செம்மரக்கட்டைகள், மினி லாரி மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். மொத்தம் 388 செம்மரக்கட்டைகளின் மதிப்பு 5 கோடி ஆகும். இவர்கள் யார் மூலம் வெட்டி கடத்தி செல்கிறார்கள். இவர்களுக்கு உடந்தையாக யார்? யார்? செயல்படுகிறார்கள். இவர்கள் யாருடன் தொடர்பு கொண்டு விற்பனை செய்து வருகிறார்கள் என பல்வேறு  கோணங்களில் விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: