எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நாகை மீனவர் படுகாயம்

நாகை: எல்லைதாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் மீனவர் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை அக்கரை ேபட்டையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் விசைபடகு ஒன்றில் கடந்த 31ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 42 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் விசைப்படகை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதை சற்றும் எதிர்பார்க்காத மீனவர்கள், படகின் நாலாபுறமும் ஓடி கீழே படுத்துக்கொண்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் விசைப்படகை ஓட்டி சென்ற கலைச்செல்வன்(33)  தலையை உரசி சென்ற குண்டு படகின் ஒரு பகுதியை துளைத்து நின்றது. இதில் தலையில் காயமடைந்த கலைச்செல்வன் படகிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து விசைப்படகை மீனவர்கள் கரைக்கு திருப்பினர். நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள், படுகாயமடைந்த மீனவர் கலைச்செல்வனை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் கலைச்செல்வனை, நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழக அரசுக்கு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து நாகை மீனவர்கள் கூறுகையில், மீனவர்கள் எல்லை  தாண்டி மீன் பிடிப்பதில்லை. ஆனால்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை  கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதே நிலை  நீடித்தால் நாங்கள் மீன்பிடி தொழிலையே கைவிடும் நிலை ஏற்படும். இதை தடுத்து நிறுத்த  ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: