சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை: நெல்லையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு: 18ம் நூற்றாண்டை சேர்ந்தது

நெல்லை: நெல்லை டவுனில் வீட்டில் வைத்து முதியவர் பூஜை செய்து வந்த 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஐம்பொன் சிலையை  சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை டவுனில் ஒரு வீட்டில் பூஜை அறையில் ஐம்பொன்சிலை வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து நெல்லை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு படையினர், நெல்லை டவுன் சாலியர் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் (74) என்பவர் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

வீட்டில் உள்ள பூஜை அறையில் சுமார் 2 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட லட்சுமி அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை 18ம் நூற்றாண்டை சேர்ந்த சிலை எனவும், அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனினும் வரலாற்று ஆய்வாளர்கள், சிலை மதிப்பீட்டாளர்கள் வந்து ஆய்வு செய்த பின்புதான் உண்மையான மதிப்பீடு ெதரியவரும் என போலீசார் தெரிவித்தனர். சிலையை வீட்டில் வைத்திருந்த கோவிந்தன் கூறுகையில, 1990ம் ஆண்டு உறவினர் ஒருவர் பூஜை செய்ய கொடுத்ததாகவும்,   கடந்த 30 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பூஜை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: