சேலம் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தீக்குளிக்க முயற்சி: சாலை மறியலால் பரபரப்பு

சேலம்: சேலம்  கலெக்டர் அலுவலகம் முன்பு 10 திருநங்கைகள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  சேலம் பொன்னம்மாப்பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகே திருநங்கைகள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் 2 கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவர், திருப்பத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல புதிய பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது, எதிர்கோஷ்டியை சேர்ந்த 3 திருநங்கைகள் மற்றும் ஒரு ஆண், அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், படுகாயமடைந்த திருநங்கை சேலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.

இதனிடையே, பொன்னம்மாபேட்டையை சேர்ந்த திருநங்கைகள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்து, தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து தண்ணீர் ஊற்றினர். திடீரென திருநங்கைகள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அச்சமயம் 2 திருநங்கைகள் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்ற திருநங்கைகள் போலீசார் காலில் விழுந்து தங்களை கருணை கொலை செய்யுமாறு கூறி கதறி அழுதனர்.

பின்னர் திருநங்கைகள் கூறுகையில், `எங்கள் பகுதியை சேர்ந்த திருநங்கை தாய் வீட்டிற்கு செல்ல புறப்பட்டபோது, எதிர்கோஷ்டியை சேர்ந்த 4 பேர் அவரை தாக்கி, விபசாரத்தில் ஈடுபட்டு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி அடித்துள்ளனர். இதை தட்டிக் கேட்ட 2 திருநங்கைகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் காவலில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும்’ என்றனர். தொடர்ந்து திருநங்கைகளை டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: