கொரோனா விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 31ம் தேதி கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆர்த்தி தலைமையில், கொரோனா விழிப்புணர்வு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடந்தது. அப்போது, பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது. பின்னர், டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் உள்பட பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.பி. சுதாகர், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் தேவி கலந்துகொண்டு கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் கிராம மக்களிடம் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். வெளியே சென்று வீடு திரும்பும்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும், அடிக்கடி கிருமிநாசினிகள் வைத்து கைகளை துடைத்து கொள்ளவேண்டும். சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து தமிழகம் விடுபட அனைவரின் பங்களிப்பு மிகவும் அவசியம் என வலியுறுத்தினார்.இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி, ஒன்றிய பொறியாளர் திருமலை, பணி மேற்பார்வையாளர் மூவேந்தன், ஊராட்சி செயலர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: